கருணாநிதி விளக்கம்-ராமதாஸ் பதில் விளக்கம்

திண்டிவனம்: டாடா தொழிற்சாலையை அமைத்தால் நெல்லை, தூத்துக்குடி வட்டாரம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
தூத்துக்குடி மாவட்டம் ராதாபுரம், சாத்தான்குளம் தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் பாமக சார்பில் கருத்து கேட்டது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது.
கனிமங்களை பிரித்து எடுப்பதால் அந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும் என்பதில் எள்ளளவு கூட அறிவியல் உண்மை இல்லை என கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிவியல் உண்மையை நான் மறுக்கிறேன். இதில் உண்மை இருக்கிறது.
திருச்செந்தூர் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் அறிக்கைகளின்படி, மாவட்ட ஆட்சியர் பழனியாண்டி கடந்த 26-09-2006 அன்று தமிழக அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அப்பகுதி மக்களின் அச்சத்தையும், உண்மை நிலையையும் உணர்த்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் பழனியாண்டி இந்த அறிக்கையினை 16 தலைப்புகளில் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2005ல் பல்வேறு அரசு அலுவலகங்கள் 9 கடிதங்களை அரசின் கவனத்துக்கு அனுப்பியுள்ளன.
அதில் மிகவும் முக்கியமானது, அப்பகுதியில் 8 மீட்டர் ஆழத்திற்கு சுரங்க பணிகளை மேற்கொண்டால் அப்பகுதிகளில் வேளாண்மை முற்றிலுமாக அழிந்து பாலைவனமாக மாறிவிடும்.
இதனால் அப்பகுதி முழுவதும் பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் அனைவரும் அகதிகளாக செல்லும் நிலை ஏற்படும் எனவும், வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அறிக்கைகள் குறிப்பிடுவதாக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாலைவனமாக ஆகிவிடும் என்ற கருத்து வேண்டும் என்றே சொல்லப்படுவது அல்ல.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் கடந்த 04-01-2006ல் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 6 மீட்டர் ஆழத்திற்கு மண் எடுப்பதால் தாவர இனங்கள் மற்றும் மரம், செடி, கொடிகளுக்கு அழிவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேரி பகுதியை மேம்படுத்துவதற்காக தமிழக அரசின் வேளாண்துறை மூலம் 1978-79ல் காற்று அரிப்பு கட்டுப்பாட்டு திட்டம் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. டேனிடா என்ற அமைப்பின் மூலம் 1993-94ம் ஆண்டில் 6.25 கோடி செலவிலும், 2வது கட்டமாக கடந்த 2004ல் 41.72கோடி செலவிலும், ஒருங்கிணைந்த நீர் பயன்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பெருமளவு மரம் வளர்ப்பதும், நீர்வள ஆதாரத்தினை மேம்படுத்துவதமான பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி பசுமையாக மாறியுள்ளது.
இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பனையேறும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வேலை இல்லாத நாட்களில் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.
எனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் டாடா நிறுவனத்தின் டைட்டானியம் தொழிற்சாலை அங்கு அமைவது ஏற்றது இல்லை என்பதே பாமகவின் கருத்தாகும் என்றார் ராமதாஸ்.